Friday, May 22, 2009

யாழ்தேவி ஒரு மாதாந்த சஞ்சிகையாக வெளிவருகிறது.

கவிதையாக மாற உகந்த ஒரு காட்சி சொற்களால் பிடிக்கப்பட்டிருந்தால் தான் அது கவிதையாகியிருக்கிறது.அதில் இருக்கும் ஒரு சின்ன ஆச்சரியம் தான் அதை கவிதைக்கான கருவாக்கி வைத்தது.ஆச்சரியப்படாத அந்த நொடிப்பொழுது சொற்களில் நீண்டுவிடாத செறிவுதான் அதைக்கவிதையாக்குகிறது.

இப்படி கவிதையை வரைவிலக்கணப்படுத்த முடியுமா?

யாழ்ப்பாணத்தில் அப்பொழுது மல்லிகை என்ற சஞ்சிகை வந்து கொண்டிருந்தது.பல யாழ்ப்பாண இலக்கியக்கூட்டத்தின் பசியை அது தீர்த்து வைத்தது.ஆனால் இந்திய இலக்கிய பத்திரிகைகளால் பசியெடுத்த யாழ்பாண வாசகர்களில் எத்தனை பேரை அது தன்னுடைய சிறப்பம்சங்களால் ஈர்த்துக்கொண்டது என்று என்னால் கூறமுடியாது.ஆனால் இந்தியப்பத்திரிகைளி;ன் வரத்துக்குறைந்தவுடன் ஆவி குமுதம் வாசகர் வட்டத்தை மீறிய இலக்கிய ஆர்வலர்கள் மல்லிகையை நாடினார்கள்.ஏற்கனவே இருந்த எழுத்தாளர்களுக்கு மல்லிகை ஒரு தளமாக இருந்தாலும் புதிதாக சிருஷ்டிப்பவர்களை உருவாக்குவதில் அது எவ்வளவு தூரம் பங்களித்திருந்தது என்றால் அது குறைவு.

என்னுடைய ஏக்கமெல்லாம் இப்படியாக எழுதக்கூடியவர்களை எல்லாம் இலங்கையில் தேடிக்கண்டு பிடிக்கவேண்டும் என்பதுதான்.அதுதான் யாழ்தேவி என்று பத்திரிகை தொடங்க வேண்டும் என்கிற எனது ஆர்வத்தைக் கூட்டிக்கொண்டே இருந்தது.மண்டை நிறை இலக்கியப்பித்துடன் அதைப்பேசித்தீர்த்துக்கொள்ள யாரும் இல்லையென்று ஏங்கியிருக்கிறீர்களா? இப்படிவாருங்கள் நீங்கள் எனது ஜாதி.நல்ல திரைப்படம் நல்ல இசை நல்ல கவிதை நல்ல எழுத்துக்கள் என்று நீங்கள் ரசித்தவற்றையெல்லாவற்றையும் பற்றி ஒரு நாலுவரியாவது பகர்ந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் எங்களுக்கு நெருங்கி வந்து விட்டீர்கள்.யாழ்தேவியின் இன்னொரு முக்கியமான நோக்கம் இளைஞர்களின் எழுத்துக்களை ஊக்குவிப்பதாகும்.உயர்கல்வி கற்க்கும் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் எழுத்துக்களுக்கு யாழ்தேவி எப்போதும் முதலிடம் வழங்கும்.

சிறந்த உருவாக்குபர்களுக்கு இலங்கை பத்திரிகைளில் இடமில்லையா என்று நீங்கள் கேட்டால் நான் அடிவயிற்றைப்பிடித்துக்கொண்டு கத்திச்சொல்லுவென் ‘இல்லை என்று’.எங்கள் பத்திரிகைகளுக்கு வேறுவேலை இருக்கிறது. பழங்கதை பேசவும் படிப்பவர்களை உசுப்பவும்.

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை!

எப்படியிருக்கிறது எழுத்து..நாங்கள் இங்கே ஞானக்கூத்தர்களை உருவாக்க வேண்டுமானால் முதலில் ஏற்கனவே இருந்த ஞானக்கூத்தனின் நிழலையாவது காட்டினால்தான் அது முடியும்.அதற்கான தடயத்தை நான் பிறந்து இருபத்து நான்கு வருடங்களாகிறது இன்னும் பார்க்க முடியவில்லை இலங்கை பத்திரிகை உலகில்.சிலது அவ்வப்போது தலைகாட்டத்தான் செய்தன உதாரணம் அமுது.


இலங்கையில் பத்திரிகைத்துறையில் சஞ்சிகைகளில் முதலிடுவதென்பது காசை கோயில் உண்டியலில் போடுவதற்குச்சாமனம்.எங்களின் நோக்கம் யாழ்தேவி வெளியிடுவதன் மூலம் பணந்திரட்டுவதல்ல.அது முடியாத காரியமும் ஆகும்.யாழ்தேவி இணையத்தளத்தைபோலவே யாழ்தேவி சஞ்சிகையும் ஒரு லாபநோக்கற்ற தயாரிப்பாகவே இருக்கும்.முதன் முதலில் இதனை ஒரு மாதாந்தர சஞ்சிகையாக வெளியிடுவதுதான் எங்கள் நோக்கம்.அதன் விற்பனையைப்பொறுத்து அது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருதரமோ அல்லது மூன்று மாதத்திற்கொருதரமோ வெளியிடப்படலாம்.சிருஷ்டிகளின் தரத்தை அலசுவதற்கும் அச்சுக்கான ஆக்கங்களை பொறுக்கி எடுக்கவும் இளம் பத்திரிகையாளர்கள் அடங்கிய ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.தனி நபர் சார்ந்த விருப்பு வெறுப்புகளை தவிர்ப்பதுதான் இதன் நோக்கம்.புத்தக வெளியீட்டுக்கான எழுத்துக்கள் யாழ்தேவி பதிவர்களிடமிருந்தும் தபால் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் பெற்றுக்கொள்ளப்படும்.இதற்கான அறிவிப்புகள் யாழ்தேவி இணையத்தளத்திலும் மற்றும் யாழ்தேவி வலைப்பூவிலும் வெளியிடுப்படும்.

எங்களுக்கு உங்களுடைய உதவி நிச்சயமாகத்தேவை.பணம்தானே எல்லாவற்றுக்கும் அச்சாணி.உண்மையான தமிழ் எழுத்துகளில் சஞ்சிகைளில் ஆர்வம் உள்ளவர்கள் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.ஒரு வருட காலத்திற்கு நீங்கள் சந்தாதாரர்கள் ஆனாலே நாங்கள் புதுப்பலம் பெறுவோம். நின்மதியுடனும் தரத்துடனும் நாங்கள் உழைப்பதற்கு நிச்சயமாக அது உதவும். சந்;தாவுக்கான விபரங்கள் முதல் இதழ் வெளியானவுடன் அறிவிக்கப்படும்.

பார்ப்போம் எத்தனை முத்துலிங்கங்கள் கருணாகரமூர்த்திகள் ஷோபாஷக்திகள் உருவாகுகிறார்கள் என்று.


இது சம்பந்தாக உரையாட கருத்தை பகிர்ந்துகொள்ள விரும்புபவர்கள்
இந்த தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளலாம்

(+94)11 5 762401
(+94)77 7 699776

இலக்கம் 23 இரண்டாவது சப்பல் லேன்
வேள்ளவத்தை
கொழும்பு 6.
இலங்கை.

1 comment: